எதிர்ப்புகளே இல்லாமல் ஆள்வது ஒரு வகை ; எதிர்ப்பவர்களையே இல்லாமல் செய்வது இன்னொரு வகை. இதில் குஜராத் முதல்வர் மோடியின் ஆட்சி இரண்டாம் வகை. காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது, காவல்துறை போலி மோதல்கள் (Fake Encounter) என குஜராத்தில் மோடியின் ' பொற்கால ஆட்சி ' தொடர்கிறது. தனக்கு எதிராகச் செயல்பட நினைப்பவர்களுக்கு நரேந்திர மோடி விடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே இவற்றைப் பார்க்கத் தோன்றுகிறது.
2002 குஜராத் கலவரத்திற்குக் காரணம் என்று நரேந்திர மோடிக்கு எதிராக நீதிமன்றப் படி ஏறிய, உயர் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் 2011 அக்டோபர் 7ஆம் நாள் கைது செய்யப்பட்டு இன்று சிறையில். 2004ஆம் ஆண்டு, 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் மற்றும் மூன்று இசுலாமிய இளைஞர்கள் காவல்துறையின் போலி மோதலில் கொல்லப்பட்டனர். இவர்கள் லஸ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்; மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தனர் என்பது, இவர்களைக் கொன்றதற்குப் பிறகு காவல்துறை சொல்லிய திரைக்கதை. அதேபோல் 2005 நவம்பர் 26 இல்,´ராபுதின் ஷேக் என்பவர் குஜராத் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொன்றுவிட்டு, அவரையும் லஸ்கர் இ தொய்பா உறுப்பினராக்கிவிட்டது மோடியின் காவல்துறை.
ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளுமே நரேந்திர மோடியின் காவல்துறையால் திட்டமிடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்ட போலி மோதல் படுகொலை கள் என்பது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டன. குஜராத் உயர்நீதி மன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வு விசாரணைக்குழு மாணவி இஷ்ரத் உள்பட நான்கு பேரும் காவல்துறையின் போலி மோதலினால்தான் கொல்லப்பட்டனர் என்பதை உறுதி செய்திருக் கிறது. இது போன்ற போலி மோதல்க ளுக்கு எதிராக நாடு முழுவதும் வலுவான குரல்கள் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்துகின்ற செயல்பாடுகளாகவே இவற்றைப் பார்க்க முடிகின்றது.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முன்னி றுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அதற்கான முன்னோட்டமாக மூன்று நாள் உண்ணாவிரதக் காட்சியும் மோடியால் நடித்துக் காட்டப்பட்டது. பெரிய பெரிய தலைப்பாகைக ளோடு ' மிகவும் நல்லவர் ' வேடத்தைக் கச்சிதமாகவே செய்தார். ' ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும்பேனும் ' என்பதுபோல, உள்குத்துகளை எல்லாம் கொஞ்ச நேரம் ஒத்தி வைத்துவிட்டு, சுஷ்மா ஸ்வராஜ், லால் கின் அத்வானி உள்ளிட்ட பாத்திரங்களின் நடிப்பும் நிறைவாகவே இருந்தன. நரேந்திர மோடி பிரதமரானால்...குஜராத்தில் இப்போது செயல் படுத்தப்படும் ' நலத்திட்டங்கள் ' இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும். அனைத்து வேறுபாடுகளும் அதிரடியாக நீக்கப்பட்டு, ' இந்துத்துவா ' என்னும் ஒரே கு(ட்)டைக்குள் ஒற்றுமையாக வாழ, ' போர் 'க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாடு சந்திக்க இருக்கின்ற தவிர்க்க முடியாத ' அபாய அடையாளம் 'தான் நரேந்திர மோடி. அந்த அபாயக் குறியீட்டைத்தான் அரசியல் வழிகாட்டியாக, ஆட்சி செய்வோருக்கு முன்னு தாரணமாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. பரமக்குடித் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, மோடியின் மகுடிச் சத்தம் தமிழ்நாட்டிலும் கேட்கத் தொடங்கி விட்டதோ என்ற அச்சம் ஒவ்வொருவர் மனத்திலும் குடியேறியிருக்கிறது. மக்கள் நலப் பணியாளர் பணிநீக்கம், அண்ணா நூலகம் இடம் மாற்றம் போன்ற ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அந்த அச்சத்தை அதிகப்படுத்துகின்றன. பெரியாரின் மண்ணில் இந்துத்துவாவிற்கு இரங்கல் கூட்டம் மட்டும்தான் போட முடியும் என்றபோதும், அதற்கிடையில் ஏற்படக்கூடிய இழப்புகளைச் சந்தித்துத்தான் தீரவேண்டியிருக்கிறது.
திராவிட இயக்க அரசியலைப் புறக்கணித்து, அரசியல் செய்பவர்கள், மறைமுகமாக மோடி போன்ற அபாய அடையாளங்களுக்குத் துணை போகின்றோம் என்பதை உணர வேண்டும். இல்லையயன்றால் தமிழ்நாடும் ' குஜராத் ' ஆக்கப்பட்டுவிடும். தமிழ்நாடு என்றதும் சமூகநீதிதான் நினைவுக்கு வரவேண்டுமே தவிர, மனுநீதி அன்று.
2002 குஜராத் கலவரம், காவல்துறை அதிகாரி கைது, போலி மோதல்கள் என எல்லாவற்றிற்கும் பின்னணியில் மோடியின் அதிகாரம் பயன் பட்டிருக்கிறது என்ற உண்மை வெளிவந்தும், இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் நீதியின் குரலைவிட, அநீதியின் அதிகாரம் வலுவானதாக இருக்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக