திங்கள், டிசம்பர் 05, 2011

பேபி அணையை உடைக்க கடப்பாரை, ஆயுதங்களுடன் கிளம்பிய கேரள பாஜகவினர்

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை உடைப்பதற்காக கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெறித்தனமாக கிளம்பிய கேரள மாநில பாஜக தொண்டர்களை கேரள போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள கட்சியினர் ஒற்றுமையாக இருப்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அணைக்கு ஆபத்து ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறார்கள்.

முதலில் கேரள மாநில இளைஞர் காங்கிரஸார், தமிழக மதகுப் பகுதியை சேதப்படுத்தினர். இந்த நிலையில், நேற்று வல்லக்கடவு பகுதியில் உள்ள பேபி டேமை தகர்க்க பாஜகவைச் சேர்ந்த ஒரு கும்பல் கிளம்பிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவைச் சேர்நத 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கையில் கடப்பாரை, மண்வெட்டி, நீண்ட கம்புகள் ஆகியவற்றுடன் ஊர்வலமாக பேபி டேமை நோக்கிக் கிளம்பினர். பேபி டேமைத் தகர்க்கும் நோக்கில் அவர்கள் சென்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

போலீஸாரை சற்றும் மதிக்காத, கண்டு கொள்ளாத கேரள பாஜகவினர், போலீஸாரை தங்களது கையில் இருந்த கொடி சுற்றிய கம்பால் தாக்கவும் ஆரம்பித்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களை மடக்கிக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கேரள மாநில பாஜக இளைஞர் அணி இந்த வன்முறைச் செயலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் முரளீதரன் கூறுகையில், இரு மாநிலங்களுக்கிடையிலான இந்தப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும்தான் காரணம் என்றார். மேலும் கேரள மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி, முல்லைப் பெரியாறு அணை நல்ல நிலையில் இருப்பது போல கேரள உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்ததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக