ஞாயிறு, நவம்பர் 13, 2011

அரபு லீக்கிலிருந்து சிரியா சஸ்பெண்ட் !!!

கெய்ரோ:இம்மாதம் துவக்கத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறி கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்திவரும் சிரியாவை சஸ்பெண்ட் செய்ய அரப் லீக் தீர்மானித்துள்ளது. அரசு எதிர்ப்பாளர்கள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு ஒப்பந்தத்தை அமுல்படுத்தும் வரை இந்த சஸ்பெண்ட் நீடிக்கும்.
அரபு லீக்கில் சிரியாவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. சிரியா அரசுக்கு எதிராக பொருளாதார, அரசியல் தடை ஏற்படுத்தப்படும் என கெய்ரோவில் நடந்த அரபு லீக் கூட்டத்திற்கு பிறகு பேசிய கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜாஸிம் அல்தானி தெரிவித்துள்ளார்.
சிரியாவிலிருந்து தூதர்களை திரும்ப அழைக்க அரபு லீக்கின் உறுப்பு நாடுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவிலியன்களை கொலைச் செய்வது தொடர்ந்தால் சிரியா தேசிய கவுன்சிலுக்கு(எதிரணி) நாட்டின் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என அரபு லீக் தெரிவித்துள்ளது.
லிபியாவில் எதிர்ப்பாளர்கள் உருவாக்கிய என்.டி.சியின் மாதிரியில் சிரியாவில் எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்புதான் தேசிய கவுன்சில். 19 நாடுகள் சிரியாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தபொழுது லெபனானும், யெமனும் எதிர்த்தன. ஈராக் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இம்மாதம் 16-ஆம் தேதி முதல் சஸ்பென்சன் அமுலில் வரும்.
சிரியாவின் மீது பல தரப்பட்ட நிர்பந்தங்களை அளித்தபோதும் அவை பலனளிக்காததால் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டதாக அல் தானி கூறினார். புதிய அரசு நடைமுறைக்கு வரும் வரை கருத்தொற்றுமை ஏற்படுவதற்கு சிரியாவின் அனைத்து எதிர்கட்சிகளும் கெய்ரோவில் அரபு லீக்கின் தலைமையகத்தில் கூட்டம் நடத்த அரபு லீக் அழைப்பு விடுத்துள்ளது.
அரபு லீக்கிலிருந்து சிரியாவை வெளியேற்ற வேண்டும் என ஐரோப்பிய நாடுகளும், மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்சும் கோரிக்கை விடுத்திருந்தன. 11 தினங்களில் 250 பேர் சிரியா ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை 11 நபர்களை ஹும்ஸ் நகரத்தில் ராணுவம் சுட்டுக் கொன்றதாக தன்னார்வ தொண்டர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக