புதன், நவம்பர் 16, 2011

அமெரிக்கா:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

:உலகின் 900க்கும் மேற்பட்ட நகரங்களில் கார்ப்பரேட் குத்தகை முதலாளிகளுக்கு எதிராக போராட்டம் துவங்க காரணமான நியூயார்க் ஜுக்கோட்டி பூங்காவில் தங்கியுள்ள ‘வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ இயக்கத்தை சார்ந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் நியூயார்க் நகர போலீஸ் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது.
பூங்காவிலிருந்து வெளியேற மறுத்த 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைதுச் செய்தனர். பூங்கா அசுத்தமானதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறி போலீஸ் போராட்டக்காரர்களை வெளியேற்றியது.
செவ்வாய்க்கிழமை பூங்காவின் உரிமையாளரான ப்ரூக்ஃபீல்டிடம் அதனை ஒப்படைத்துவிட்டதாக போலீஸ் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே போராட்டக்காரர்களிடம் பூங்காவை விட்டு வெளியேற போலீஸ் உத்தரவிட்டது. செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வெளியேற கெடு விதித்தது போலீஸ். ஆனால், போராட்டக்காரர்கள் மறுக்கவே வலுக்கட்டாயமாக அவர்களை போலீஸார் வெளியேற்றினர். ஆனால், உடனடியாகவே போராட்டம் மீண்டும் துவங்கும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். ஜுக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேறிய போராட்டக்காரர்கள் அருகிலுள்ள ஃபோளி சதுக்கத்தில் ஒன்றுதிரண்டுள்ளனர்.
போராட்டக்காரர்களை வெளியேற்றிய நடவடிக்கை அரசின் பாதுகாப்பை முன்னிட்டா என்பது குறித்து போராட்டக்காரர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஜுக்கோட்டி பூங்காவில் உள்ள கூடாரங்களை போலீஸ் சேதப்படுத்தியது போராட்டத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாக கருதப்படுகிறது. போராட்டக்காரர்களின் கருத்து சுதந்திரத்தை விட மதிக்கவேண்டியது மக்களின் ஆரோக்கியமும், பாதுகாப்புமாகும் என நியூயார்க் மேயர் மிகாயேல் ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளார். இப்பகுதியில் உள்ள வர்த்தகர்களின் அழுத்தம் காரணமாகவே போராட்டக்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டது என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக