புதன், நவம்பர் 16, 2011

அப்துல் கலாம் யாருடைய பிரதிநிதி?

கூடங்குளம் அணுமின் நிலையம் எல்லா விதத்திலும் பாதுகாப்பானது. இந்தியாவை உலக சக்தியாக மாற்றுவதில் இம்மின்நிலையம் மகத்தான பங்கினை வகிக்கும் என முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் இந்நாட்டு குடிமக்களுக்கு உறுதியளித்துள்ளார். போதாக் குறைக்கு அணுமின் நிலையத்தை சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கு ரூ.200 கோடிக்கான 40 பக்க திட்ட அறிக்கையையும் தமிழில் வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய நகரங்களை கூடங்குளத்தை சுற்றியுள்ள 30 லிருந்து 60 கி.மீ சுற்றளவிலான கிராமங்களுடன் இணைக்கும் நாற்கர தேசிய நெடுஞ்சாலை, பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு கடன் உதவி, கடனில் 25 சதவீதம் மானியம், வீடுகள், கம்யூனிட்டி ஹால்கள், மீன்பிடிக்க விசைப்படகு, விளையாட்டு மைதானங்கள், சிகிட்சைக்கு 500 படுக்கை வசதிகள் கொண்ட உயர்தர மருத்துவமனை, நடமாடும் மருத்துவ வசதி, 5 சி.பி.எஸ்.இ பள்ளிக்கூடங்கள், சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் இணைக்கும் ப்ராட்பேண்ட் இணையதள சேவை என பல்வேறு வாக்குறுதிகள் அடங்கியுள்ளன.
இத்திட்டத்தை அமுல்படுத்தும் போது உள்ளூர் மக்களின் சந்தேகங்களும், கவலைகளும் எல்லாம் தீர்ந்து அவர்கள் முழுமையாக அணுமின் நிலையத்திற்கு ஒத்துழைப்பை தருவார்கள் என்பது அப்துல் கலாமின் நம்பிக்கை. சுருக்கமாக கூறினால் காசு கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்பது அப்துல்கலாமின் திட்டமாகும்.
அப்துல் கலாமின் திட்டமும், ஆலோசனைகளும் மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக்கொண்ட கள்ளம் கபடமற்ற ஓர் விஞ்ஞானியின் கருத்தாக நாம் கருதினால் நிச்சயமாக நாம் தவறிழைத்துவிட்டோம் என்பதுதான் பொருள். மத்திய அரசின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதிதான் அப்துல் கலாமின் கூடங்குளம் வருகையும், அதனைத் தொடர்ந்து வெளியிட்ட அணுமின் நிலைய பாதுகாப்பு உறுதியும், திட்ட அறிக்கையும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்க்கும் உள்ளூர் மக்களின் சந்தேகங்களையும், கவலைகளையும் களைய அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உள்பட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைப்பதாக ஏற்கனவே மத்திய அரசு வாக்குறுதியளித்திருந்தது.
ஆனால், தற்பொழுது அக்குழு அரசின் சொல்லிற்கு தலையாட்டும் குழுவாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. ஏ.பி.ஜெ.அப்துல் கலாமிற்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் உள்ள மரியாதையையும், மதிப்பையும் பயன்படுத்தி அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்களின் மனோநிலையை மாற்றிவிடலாம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். ஆனால், அது துவக்கத்திலேயே தோல்வியை தழுவிவிட்டது. அப்துல் கலாம் மட்டுமல்ல எந்த விஞ்ஞானி கூறினாலும் அக்கருத்தை ஏற்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். செர்னோபிலும், புகுஷிமாவும் தந்த பாடங்களை அவர்கள் மறந்துவிடவில்லை!
ஒரு மணிநேரம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வந்த அப்துல் கலாம் அதற்கு ஃபிட்னஸ் சர்ட்பிக்கெட்டையும் அளித்துவிட்டார். இத்தகைய குறுகிய கால அவகாசத்தில் அவர் என்ன சோதனையை நடத்திவிட்டார்? அதுமட்டுமல்லாமல் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று அந்த மக்களின் எதிர் கருத்துக்களை கேட்கவும் அப்துல் கலாம் முயலவில்லை. சர்வதேச தளத்தில் விஞ்ஞானிகளுக்கு இடையே விவாதங்கள் நடத்தி முடிவுச் செய்யவேண்டிய விவகாரத்தில் ஒரு விஞ்ஞானி அல்லது பொறியாளரான அப்துல் கலாமின் கருத்துக்களை ஏதோ வானத்தில் இருந்து வந்த அசரீரியைப் போல சிலர் ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பத்திரிகைகளிலும், இணையதளங்களிலும் பெரும்பாலான வாசகர்கள் நிலைமையை புரியாமல், கண்மூடித்தனமாக அப்துல் கலாமின் கருத்துக்களை ஆதரித்து கருத்துக்களை பதிவுச் செய்கின்றனர். எதிர்கால சந்ததியினரின் வாழ்வுரிமைக்காக போராடும் கூடங்குளம் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கற்களை எறிந்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த அதிமேதாவிகள்.
இந்திய வரலாற்றில் மிகக்கொடூரமாக நிகழ்த்தப்பட்ட குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையின் போதும், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் அரச பயங்கரவாதத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்காத அப்துல் கலாமா அணுமின் நிலையத்தின் எதிர்கால ஆபத்துக்களைக் குறுத்து கவலைப்படப்போகிறார்?
ஆபத்துக்களும், அச்சுறுத்தல்களும் நிறைந்த இந்தியாவை தான் அப்துல் கலாம் கனவு காண சொல்கிறாரா?
அ.செய்யது அலீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக