செவ்வாய், நவம்பர் 01, 2011

15 தொழிலாளர்களை நக்சலைட்டுகள் கடத்தினர் - பீகாரில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள்!!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 15 தொழிலாளர்களை மாவோ., நக்சலைட்டுகள் கடத்தி சென்றனர். இவர்களை மீட்க போலீசார் காட்டுக்குள் தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர்.


சமீபகாலமாக நக்சலைட்டுகள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று பீகார் மாநிலம் ஜாமுயி மாவட்டத்தில் பல்தார்சட் அருகே 15 கட்டுமான தொழிலாளர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இங்குள்ள பர்னார் ஆற்றுப்பகுதியில் பாலம் கட்டும் பணியில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 20 க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கையில் துப்பாக்கியுடன் வந்தனர், 15 பேரையும் காட்டுக்குள் கடத்தி சென்று விட்டனர். இவர்கள் கடத்தப்பட்டதன் காரணம் இது வரை வெளிய வரவில்லை. போலீசார் இவர்களை மீட்க காட்டுக்குள் பல குழுக்களாக சென்று தேடி வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட எஸ்.பி., ஆர்.என்.சிங் கூறுகையில்; ஜார்கண்ட் மாநிலம் கிரித்த மாவட்டம் அதாவது பீகார் மாநில எல்லை பகுதியில் உள்ளது. இங்கிருந்து தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றார்.

மாநிலத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சாட் திருவிழா நேரத்தில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பதால் உறவினர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர், நக்சல்கள் எப்போதும் அரசு அலுவலர்களை கடத்தி செல்வதும் பின்னர் விடுவிப்பதும் வாடிக்கையாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த முறை தனியார் நிறுவன தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக